வெள்ளைவான் சாரதிகள் எனக்கூறி ஊடக சந்திப்பை நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை – மஹர பிரதேசத்தில் வைத்து இவர்கள் நேற்று இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த குறித்த இருவரும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே கடந்தகால வெள்ளைவான் கடத்தல்களை செய்ததாக பகிரங்க வாக்குமூலம் அளித்திருந்தனர்.
மேலும் போர் முடிந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொன் கணக்கான தங்கமும் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அந்த இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இவர்களால் வெளியிடப்பட்ட தகவல்கள் தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இதற்கமைய சந்தேக நபர்களாக அடையாளங்காணப்பட்ட குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Lanka Newsweek © 2026